Vasantham Seithi | 9 March 2024
சிங்கப்பூரின் பல்வேறு சமயத்தினரும் காஸாவுக்காகத் தொடர்ந்து நிதி திரட்டி, நிவாரணப் பொருள்களை அனுப்புவது சமூகமாக நாம் யார் என்பதைக் காட்டுவதாக உள்துறை, சட்ட அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.
காஸாவிலுள்ள சிறுவர்களுக்காகப் பொருள்களைப் பொட்டலமிடத் தெம்பனிஸிலுள்ள (Tampines) Soka பாலர்பள்ளியில் ஒன்றுகூடிய தொண்டூழியர்களிடம் அமைச்சர் பேசினார்.
நிகழ்ச்சிக்கு Humanity Matters லாப-நோக்கமற்ற அமைப்பு ஏற்பாடு செய்தது.
காஸாவிலுள்ள சிறுவர்களுக்காக 5,000 பொட்டலங்களில் தொண்டூழியர்கள் பல பொருள்களைச் சேர்த்தனர்.
முதுகுப் பைகள், காற்றால் நிரப்பக்கூடிய தலையணைகள், வைட்டமின் மிட்டாய்கள், தின்பண்டங்கள், தண்ணீர் போத்தல், மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும் பந்து (stress ball), பொம்மை முதலிய பொருள்கள் பொட்டலங்களில் இருந்தன.
பொருள்களுக்காகச் செலவிடப்பட்ட தொகை சுமார் 100,000 வெள்ளி (US$75,000).
அது மிகப் பெரிய தொகை இல்லை என்றாலும் நம்மால் இயன்றதைச் செய்யமுடியும் என்பதை இது காட்டுவதாகத் திரு. சண்முகம் சொன்னார்.
சிங்கப்பூரர்களும் அரசாங்கமும் இணைந்து இதுவரை சுமார் 10 மில்லியன் வெள்ளி வரை காஸாவுக்காகத் திரட்டியிருப்பதை அவர் சுட்டினார்.
நிகழ்ச்சியில் இணையம் வழி மெய்நிகர் சுவரோவியமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இம்மாதம் (மார்ச் 2024) 15ஆம் தேதி தொடங்கி காஸாவில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பொதுமக்கள் ஆறுதல் வார்த்தைகளை எழுதலாம். அவை பின்னர் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு காஸா மக்களிடம் தெரிவிக்கப்படும்.
உதவிப் பொருள்கள் வரும் புதன்கிழமை (13 மார்ச்) ஜோர்தானுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து காஸாவுக்கு விநியோகிக்கப்படும்.
Comments