காஸா சிறார்களுக்காக 5,000 பராமரிப்புப் பொட்டலங்களைத் தயாரித்த இளம் தொண்டூழியர்கள்
Tamil Murasu | 9 March 2024
காஸாவில் நடந்துவரும் மனிதாபிமான நிவாரண முயற்சிகளுக்குக் கைகொடுக்கும் வகையில் குறைந்தது 300 இளையர்கள் தெம்பனிசில் மார்ச் 9ஆம் தேதியன்று கூடி, பராமரிப்புப் பொட்டலங்களைத் தயாரிக்க ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ என்ற லாப நோக்கற்ற அமைப்புக்கு உதவினர்.
இந்த 5,000 பராமரிப்புப் பொட்டலங்களின் மொத்த மதிப்பு $100,000 ஆகும். ஒவ்வொரு பொட்டலத்திலும் பை, காற்றடைக்கப்படும் தலையணை, ஊட்டச்சத்து மிட்டாய்கள், தண்ணீர், மன அழுத்தத் தணிப்புப் பந்து, பொம்மை, தின்பண்டங்கள் ஆகியவை வைக்கப்பட்டன.
காஸாவைச் சென்றடைவதற்காக, பொட்டலங்கள் அனைத்தும் மார்ச் 13ஆம் தேதியன்று ஜோர்தானுக்கு விமானம்வழி அனுப்பிவைக்கப்படும்.
2.3 மில்லியன் மக்கள் கொண்ட காஸாவுக்கு அத்தியாவசியப் பொருள்களை அனுப்ப, சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் உட்பட மற்ற மனிதாபிமான உதவி அமைப்புகள் மேற்கொண்ட முயற்சிகளுடன் இதுவும் சேர்ந்துள்ளது.
தொடக்கக் கல்லூரிகள், மதரசா பள்ளிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்விக் கழகங்கள், உயர்நிலைப் பள்ளிகள் ஆகியவற்றைச் சேர்ந்த தொண்டூழியர்கள் தெம்பனிசில் உள்ள சோகா பாலர் பள்ளியில் கூடிய நிலையில், அவர்களின் பணியைப் பாராட்டினார் உள்துறை, சட்ட அமைச்சர் கா.சண்முகம்.
இதற்காக 500க்கும் மேற்பட்டோர் பதிந்துகொண்டதாகத் தெரிவித்த அவர், அவ்விடத்தில் இடப் பற்றாக்குறை உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காஸாவில் நிலைமை சோகத்தை நோக்கி மோசமடைந்து கொண்டே போவதாக திரு சண்முகம் குறிப்பிட்டார்.
“காஸாவில் நடப்பதோ, ஒரு பேரழிவு. மக்களை உதவி சென்றடைவதற்கும் துன்பத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை,” என்றார்.
காஸாவின் நிவாரணச் செயல்பாடுகளுக்காக வெவ்வேறு இனக் குழுக்களைச் சேர்ந்த சிங்கப்பூரர்கள், அரசாங்கம், இதர சமூகக் குழுக்கள் ஆகியவை ஒட்டுமொத்தமாக $10 மில்லியனுக்கு மேல் திரட்டியுள்ளதாக திரு சண்முகம் குறிப்பிட்டார்.
Comments