Tamil Murasu | 31 May 2021
மத்தியக் கிழக்கு காசா பகுதிக்கு உதவி தேவை என்று அனைத்துலக அளவில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அதற்குச் செவிசாய்க்கும் வகையில் ‘ஹியுமானிட்டி மேட்டர்ஸ்’ என்ற ஓர் உள்ளூர் அமைப்பு $85,000 மதிப்புள்ள நான்கு டன் நிவாரணப் பொருட்களைத் திரட்டி காசாவுக்கு அனுப்புகிறது.
அவை வரும் வாரங்களில் எகிப்தின் கெய்ரோ நகருக்கு அனுப்பிவைக்கப்படும். முகக்கவசங்கள், கையுறைகள், உடைகள், மூக்குக் கண்ணாடிகள், உடலை சுத்தப்படுத்தும் மருந்து கலந்த ஈரத் துடைப்புத்தாட்கள் முதலான பலவும் அவற்றில் அடங்கும்.
எட்டு உயிர்வாயு செறியூட்டிகள், போர்வைகள் ஆகியவையும் அனுப்பப்படும்.
‘ஹியுமானிட்டி மேட்டர்ஸ்’ என்ற மனிதாபிமான அமைப்பு 2019ல் அமைக்கப்பட்டது. அதில் பல சமயத்தினரும் இருக்கிறார்கள்.
நிவாரணப் பொருட்கள் கொவிட்-19 விதிமுறைகளைப் பின்பற்றி மிகவும் கவனமாக மூன்று வகைகளாகப் பிரித்து தொகுக்கப்பட்டதாக இந்த அமைப்பின் பேச்சாளர் கூறினார்.
சுகாதாரப் பராமரிப்பு, துப்புரவு, உதவி ஆகிய மூன்று வகைகளாக பொருட்கள் பிரித்து வகைப்படுத்தப்பட்டு உள்ளன.
இவை காசாவில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கும் சுகாதார பராமரிப்பு ஊழியர்களுக்கும் உதவும் என்று அறிக்கை ஒன்றில் இந்த அமைப்பு தெரிவித்தது.
காசா பகுதியில் பல ஆண்டு களில் இல்லாத வகையில் படுமோசமான வன்செயல்கள் இடம்பெற்று ஓய்ந்துள்ளன.
எகிப்து சமரச முயற்றிகளின் விளைவாக ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைதி இணக்கம் ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீ நாராணய மிஷன், அனைத்துலக பல கலாசார நிறுவனம், முஸ்லிம் வழக்கறிஞர்கள் சங்கம், இளம் சீக்கியர் நிறுவனம், சிங்கப்பூர் தாவோயிஸ்ட் மிஷன் முதலான பல அமைப்புகளும் இந்த முயற்சியில் ஹியுமானிட்டி மேட்டர்ஸ் அமைப்புக்கு ஆதரவு அளித்து உள்ளன.
நிவாரணப் பொருட்கள் சிங்கப்பூரில் இருந்து கெய்ரோவுக்கு இந்த வாரம் செல்லும். அங்கிருந்து எகிப்திய செம்பிறைச் சங்கம் மூலம் பாலஸ்தீனிய செம்பிறைச் சங்கத்திடம் அவை ஒப்படைக்கப்படும்.
ஹியுமானிட்டி மேட்டர்ஸ் அமைப்பு, 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் காசாவுக்கு இத்தகைய நிவாரண உதவிகளைச் செய்து உள்ளது.
இதனிடையே, இது பற்றி கருத்து தெரிவித்த அனைத்துலக பல கலாசார நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் திரு டென்னிஸ் கூ, “சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பை நாம் அனுபவித்து வருகிறோம். இதோடு வள்செயல் தாக்குதலும் இடம்பெற்றால் நிலைமை எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை,” என்றார்.
“பல சமய அமைப்புகளுடன் சேர்ந்து உதவி தேவைப்படும் பெரிய ஒரு சமூகத்திற்கு உதவ வாய்ப்பு கிட்டி உள்ளது.
“நாம் ஒன்றிணைந்து மனிதாபிமான உதவிகளைச் செய்ய பல வழிகள், ஏற்பாடுகள் இருக்க வேண்டியது முக்கியமானது,” என்றும் அவர் மேலும் கூறினார்.
Comments