top of page

காஸாவிற்கு 50 டன் உதவிப்பொருள்களை அனுப்பிய சிங்கப்பூர் மனிதநேய அமைப்பு

Tamil Murasu | 17 Nov 2024



சிங்கப்பூரிலிருந்து காஸாவிற்கான நிவாரண உதவி முயற்சிகளுக்குத் தலைமை தாங்கும் ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ எனும் லாப நோக்கற்ற அமைப்பு, கடந்த ஜூலை மாத நிலவரப்படி 50 டன்னுக்கும் மேற்பட்ட உதவிப்பொருள்களை காஸாவிற்கு அனுப்பியுள்ளது.


போரால் காஸா மக்கள் பசியாலும் ஊட்டச்சத்துக் குறைவாலும் அவதியுறும் வேளையில், இங்குள்ள 1,000க்கும் மேற்பட்ட தொண்டூழியர்களின் உதவியுடன் $679,000 நன்கொடையை அந்த அமைப்பு திரட்டியுள்ளது.


மேலும், $120,000 மதிப்பிலான சுகாதாரப் பராமரிப்புப் பொருள்களையும் 41 டன் உணவு, ஊட்டச் சத்துப் பொருள்களையும் அது திரட்டியுள்ளது.


அந்தப் பொருள்கள் கட்டங்கட்டமாக காஸாவிற்கு அனுப்பப்பட்டதாக நவம்பர் 17ஆம் தேதி, ஹியுமேனிட்டி மேட்டர்ஸ் அமைப்பு தெரிவித்தது.

காஸா மக்களுக்கு உதவ, புதிய நிதித் திரட்டு முயற்சியையும் (Street Collection For Gaza Relief) அது அறிவித்துள்ளது. இதன்கீழ், தொண்டூழியர்கள் வீதிகளில் சென்று பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டுவர்.


ரஹ்மதான் லில் அலாமின் அறநிறுவனத்துடன் இணைந்து இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.


நவம்பர் 17ஆம் தேதி இடம்பெற்ற நன்கொடைத் திரட்டிற்கு, சிங்கப்பூரர்களும் வெளிநாட்டு ஊழியர்களுமாக ஏறக்குறைய 300 பேர் தொண்டூழியர்களாகப் பதிவுசெய்துகொண்டனர்.


சிங்கப்பூர் முழுவதும் அவர்கள் திரட்டும் நிதியும் பொருள்களும் டிசம்பர் 1ஆம் தேதி ஜோர்தானுக்கு அனுப்பப்படும். அங்கிருந்து 2025 ஜனவரியில் தரைவழிப் பாதையில் காஸாவிற்கு அனுப்பப்படும் என்று கூறப்பட்டது.

தற்காப்பு, மனிதவள மூத்த துணையமைச்சர் ஸாக்கி முகமது, நவம்பர் 17ஆம் தேதி நன்கொடைத் திரட்டில் கலந்துகொண்டார்.


இத்தகைய நன்கொடைத் திரட்டு, ஒரு பொதுக் காரணத்திற்கு ஆதரவு தருவதற்காகச் சிங்கப்பூரர்கள் ஒன்றுபடுவதற்கான வழி என்றார் அவர்.

“பல்லாண்டுகளாகத் தொடரும் வரலாற்று, புவிசார் அரசியல் பதற்றத்தால் காஸாவில் நிலைமை சிக்கலாக இருப்பதை மறுப்பதற்கில்லை. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வல்லமை நமக்கு இல்லாமலிருக்கலாம். ஆனால், ஆக்ககரமாகப் பங்களிக்கவும் இரக்கத்துடன் நடந்துகொள்ளவும் நமக்குத் திறன் உண்டு,” என்றார் திரு ஸாக்கி.


ஹியுமேனிட்டி மேட்டர்ஸ் அமைப்பின் தலைவரும் சிங்கப்பூர்த் தூதருமான திரு ஓங் கெங் யோங், கடந்த ஓராண்டில் காஸா நிவாரணம் தொடர்பான நடவடிக்கைகளில் இங்குள்ள 1,000க்கு மேற்பட்டோர் தொண்டூழியர்களாய் உதவியதாகக் கூறினார்.


Comments


bottom of page