top of page

காஸாவிற்கு உதவ சமயங்களுக்கு இடையிலான முயற்சிகள்

Tamil Murasu | 1 Dec 2024



காஸாவில் போரால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்‌கு உதவ வெவ்வேறு பின்னணிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மதரஸா அல்ஜுனிட் இஸ்லாமியப் பள்ளியில் ஒன்றுகூடினர்.


சிங்கப்பூரிலிருந்து காஸாவிற்கான நிவாரண உதவி முயற்சிகளுக்குத் தலைமைதாங்கும் ‘ஹியுமேனிட்டி மேட்டர்ஸ்’ (Humanity Matters) எனும் லாப நோக்கற்ற அமைப்பும் ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவனமும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில், பல்வேறு சமயங்களையும் இனங்களையும் சேர்ந்த மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், இல்லத்தரசிகள் முதலியோர் கலந்துகொண்டனர்.



உடல்நலப் பராமரிப்பு, நீரேற்றம், பசி, சுகாதார ஆதரவு என நான்கு வகைகளில் 20 டன்னுக்கும் மேற்பட்ட உதவிப்பொருள்களைப் பிரித்து, இரண்டு 40 அடி கொள்கலன்களில் அடுக்‌கி வைக்‌க தன்னார்வலர்கள் ஒன்றாகச் செயல்பட்டனர். கொள்கலன்கள் ஜோர்தானுக்கு அனுப்பப்படும் என்றும் அங்கிருந்து 2025ஆம் ஆண்டு ஜனவரியில் தரைவழிப் பாதைமூலம் அவை காஸாவைச் சென்றடையும் என்றும் தெரிவிக்‌கப்பட்டது.


கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.


நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக, இன, சமய நல்லிணக்க வட்டங்கள் (Racial & Religious Harmony Circle) திரட்டிய S$538,000, காசோ­லையாக திரு டோங்கின் முன்னிலையில் ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.


இன, சமய நல்லிணக்க வட்டங்களின் ‘ஹார்மனி-இன்-ஆக்‌‌‌ஷன்’ (Harmony-in-Action) திட்டத்தின்வழி திரட்டப்பட்ட இந்த தொகை, காஸாவில் அவதிப்படுவோருக்‌கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது, இரண்டு மாதக் காலமாக நடைபெற்ற சமயங்களுக்கு இடையிலான முயற்சிகளின் பலனாகும்.


“இந்த முயற்சிகளின்மூலம் திரட்டப்பட்ட தொகையைவிட, பல்வேறு சமயங்களைச் சேர்ந்த மக்கள் எந்தவிதப் பேதமுமின்றி ஒரே நோக்கத்திற்காக ஒன்றுகூடி இத்திட்டத்திற்கு உறுதியுடன் ஆதரவளித்தது நம்மிடையே உள்ள நல்லிணக்கத்தை எடுத்துக்காட்டியுள்ளது,” என்று திரு டோங் தமது உரையில் கூறினார்.


உலகின் பல இடங்களில் சண்டைகளும் மோதல்களும் நிறைந்த இன்றைய காலகட்டத்தில், சிங்கப்பூரர்களாகிய நாம் ஒரு வலுவான சமூகமாக ஒன்றிணைந்திருப்பது மிகவும் முக்கியமானது என்றும் அவர் சொன்னார்.

இந்நிகழ்ச்சியில் ‘ஹார்மனி-இன்-ஆக்‌‌‌ஷன்’ திட்டத்தில் பங்கேற்ற சமய, சமூக அமைப்புகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. அமைப்புகளில் ஒன்றான ஸ்ரீராமர் கோயில், நிதி நன்கொடை வழங்கியதுடன் தனது கோயில் பயனாளிகளுக்கு சைவ குக்கீகளைக்‌ கொண்ட 100 புட்டிகளையும் வழங்கியது.


“தனி மாணவராக இதுபோன்ற காரணங்களுக்கு உதவி செய்வது சிரமமாக இருக்கலாம். ஆனால் இதுபோன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்படும்போது என்னாலான உதவிகளைச் செய்து நேர்மறையான ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடிகிறது,” என்றார் தனது சக நண்பர்களுடன் தொண்டு செய்ய வந்திருந்த தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவர் ஸுவாதி ராமர் பெருமாள்சாமி, 17.



“கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக, நான் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், இந்த முயற்சி சற்று வித்தியாசமானது. காஸாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ, வயது, சமயம் என்று எந்தவிதப் பாகுபாடுமின்றி பலதரப்பட்ட தன்னார்வலர்கள் ஒன்றுகூடியிருப்பதைப் பார்க்கும்போது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று இந்து தன்னார்வக் கூட்டமைப்பின் உறுப்பினரும் சொத்து முகவருமான திரு தனஸ்கோடி, 59, கூறினார்.




Comments


bottom of page